Monday, December 26, 2011

சோழர்(வன்னியர்)


:பெரிய புராணத்தில் உள்ள கூற்றுவ நாயனார் புராணம்: கூற்றுவ நாயனார் புராணத்தில் பாடல்கள் 3,4,5 இவற்றை கவனிக்கவும்.



பாடல் 3:

வென்றி வினையின் மீக்கூர
வேந்தர் முனைகள் பலமுருக்கிச்
சென்று தும்பைத் துறைமுடித்துச்
செருவில் வாகைத் திறங்கெழுமி
மன்றல் மாலை மிலைந்தவர்தம்
வளநா டெல்லாங் கவர்ந்துமுடி
ஒன்றும் ஒழிய அரசர்திரு
வெல்லாம் உடைய ராயினார்.

கருத்து: வெற்றி பெறும் செயல் மேன்மேல் பெருக, தும்பைப் பூவைச் சூடி, மன்னருடன் செய்யும் போர்கள் பலவற்றையும் கண்டு அப்போர்த் தொழிலின் நிறைவாக வெற்றி அடையும் வகையில் வாகை மாலையோடு பொருந்திய மணமுடைய மலர் மாலைகளையும் சூடி, அவ்வேந்தர்களின் வளநாடுகளை எல்லாம் கையகப்படுத்தி, மன்னர்க்குரிய முடி ஒன்று தவிர, மற்ற செல்வங்கள் எல்லாவற்றையும் அவர் உடையவர் ஆனார்.

பாடல் 4:

மல்லல் ஞாலம் புரக்கின்றார்
மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழந் தணர்தம்மை
வேண்ட அவருஞ் செம்பியர்தம்
தொல்லை நீடுங் குலமுதலோர்க்
கன்றிச் சூட்டோம் முடியென்று
நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா
டணைய நண்ணுவார்.

கருத்து: செழுமையான இவ்வுலகத்தைக் காக்கின்றவராய், நவமணிகளையுடைய பெரிய முடியைச் சூட்டுவதற்காகத் தில்லை வாழ் அந்தணர்களை வேண்ட, அவர்கள் சோழர்களின் தொன்று தொட்டு வரும் குல முதல்வருக்கு அல்லாமல் மற்றவர்க்கு முடி சூட்ட மாட்டோம் என்று கூறி, சேர மன்னரின் மலை நாட்டை அடைவாராய்,

பாடல் 5:

ஒருமை யுரிமைத் தில்லைவாழந்
தணர்கள் தம்மில் ஒருகுடியைப்
பெருமை முடியை யருமைபுரி
காவல் பேணும் படியிருத்தி
இருமை மரபுந் தூயவர்தாம்
சேரர் நாட்டில் எய்தியபின்
வரும்ஐ யுறவால் மனந்தளர்ந்து
மன்று ளாடுங் கழல்பணிவார்.

கருத்து:

கூத்தப்பெருமானிடத்து ஒரு நெறிய மனங் கொண்ட தில்லைவாழ் அந்தணர்கள், பெருமை கொண்ட அம் மணிமுடியைத் தங்களுக்குள் ஒரு குடியினர்பால் அருமையாய்க் காவல் செய்யும்படி வைத்து, இரு மரபும் தூயவரான அவர்கள், சேர நாட்டை அடைந்த பின்பு, கூற்றுவனார் தமக்குற்ற ஐயப்பாட்டினால் உள்ளம் தளர்ந்து, தில்லையம்பலத்தில் ஆடும் இறைவரின் திருவடியைப் பணிவாராய்,

---------- ---------- --------

களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் சிதம்பரம் பகுதியில் ஆட்சியாளாராக விளங்கியவர்கள். நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாக பிச்சாவரம் பகுதியில் ஆட்சி செய்தவர்.இவர்கள் "சோழனார்" என்று அழைக்கப்பட்டனர்.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பிச்சாவரம்(பித்தர்புரம் என்பதே சரி) பகுதியை ஆண்ட விட்டலராயச் சோழனார் இம்மரபினர் ஆவார்.இவரைக் குறித்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இம்மரபினர் முடி சூடிக்கொள்வதற்கு முன்பு அபிஷேகம் செய்யப்பெற்று தில்லை நடராசரின் திருநீற்றைப் பெற்று அங்குள்ல பஞ்சாக்கரப் படி மீதமர்ந்து பட்டம் புனைந்துகொண்டு தில்லையில் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லறம் புரிந்தனர். இந்தச் செய்தி திருக்கை வளம் என்ற நூலில் காணப் பெறுகிறது.

இந்நூலை இயற்றியவர் கூடல் இருவாட்சிப் புலவர் என்பவர். இவர் அரியலூர் மன்னரான விஜயரங்க ஒப்பிலாத மழவராயர் அரசவையில் இதனைப் பாடினார்.

இவ்வாறு பாடப்பெற்ற இம்மரபினர் சோழனார் என்றும் தில்லைச் சோழர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இம்மரபினரில் ஒருவர் பெயர் : புலிக்குத்திப் புலிவாயில் பொன்னூஞ்சல் ஆடிய வீரப்ப சூரப்பச் சோழனார்.

தில்லை வாழ் அந்தணர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.


இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

பிச்சாவரம் குறுநில மன்னர் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் திருமணம் சிதம்பரத்தில் நடைபெற்றதையும், இம்மன்னருக்குத் தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றதையும் 24/ 8 /1943 - இல் வெளிவந்த ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த மன்னர் 19/8/1943 - இல் முடி சூடித் திருமணம் செய்துகொண்டதைப் பாராட்டுவதற்காக சிதம்பரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்தச் செய்தி 16/10/1943 - இல் வெளிவந்த சுதேசமித்திரன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

தில்லையில் நடராசர் திருமுன் முடி சூடும் உரிமை சோழர்க்குரியது. வேறு எந்த அரச மரபினரும் இந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பது தேற்றம்.
அத்தகைய உரிமையை பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் மட்டும்தான் பெற்றிருந்தனர்.


இவர்கள் சோழர் பரம்பரை என்பதால் இந்த முடி சூடும் உரிமை பெற்றிருந்தனர்.