Friday, October 26, 2012

சோழ மன்னர்கள் யார்? அண்ணாமலை நகரிலேயே அரங்கேறிய ஓர் ஆதாரம்!








தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் இரண்டாவது கருத்தரங்கு 1995 ஆகஸ்ட் 26, 27இல் அண்ணாமலை நகரில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், ஆம் சிதம்பரத்தில் தில்லை நடராசர் திருக்கோவில் இருக்கும் ஊரில் நடைபெற்றது.

அப்போது அதாவது 1995லேயே தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய புலவர் செ.இராசு சோழமன்னர்கள் யார்? என்றும் தலைப்பில் கட்டுரை ஒன்று வாசித்தார்.
அந்தக் கட்டுரையில் சோழ மன்னர்களின் வாரிசுகள் சோழமன்னர் மரபில் தோன்றிய சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவாரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறுகிறார்.

அதற்கு முதலில் அவர் காட்டிய ஆதாரம்: 2.7.1939 அன்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம், தேப்பெருமாள் நல்லூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் வரவேற்புரையாற்றிய வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள், சோழ மன்னர் மரபினர் சிதம்பரத்திற்கு அண்மையில் உள்ள பிச்சாவரம் ஜமீன்தார் குடும்பத்தினரே என்று கூறினார்.




சோழப் பெருமன்னர்களுக்குக் குலதெய்வம் தில்லை நடராசரே என்று முன்னர் குறிப்பிட்டோம். விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தியில் தன்குல நாயகன் தாண்டவம்பயிலும் தில்லையம்பலம் என்று கூறப்படுகிறது.

இன்று உள்ள பிச்சாவரம் ஜமீன் தார்களுடைய குலதெய்வம் நடராசப் பெருமாளே ஆவார். இவ்வாறு சோழ மன்னர்களின் மரபினர் பிச்சாவரம் ஜமீன்தார்களே என்று கூறி புலவர் செ.இராசு காட்டும் ஆதாரம் தஞ்சைச் சோழமன்னர்களின் வாரிசு என்று கூறுவதற்குக் காட்டும் ஆதாரம், தில்லைக் கோயில் உரிமையாளர்கள் யார் என்பதைக் கூறுகிறது.

அண்மைக்காலம்வரை தில்லை நடராசர் கோயில் உரிமை பிச்சாவரம் ஜமீன்தாருக்கே இருந்தது. ஆதலால் தில்லைக் கோயிலின் சாவி நாள் தோறும் ஜமீன்தாரிடம் ஒப்படைக்கப் பட்டது. அர்த்த சாமப் பூசையின் பின் கோயில் சாவி பல்லக்கில் வைக்கப் பட்டுப் பிச்சாவரம் கொண்டு சென்று அளிக்கப்படும். அதிகாலை மீண்டும் அவ்வாறே வாங்கி வரப்படும்.

நடுநிலையாளர்களே நாட்டோர்களே! பாருங்கள் இந்த உண்மை வெளிச்சத்தை எங்களுக்குத்தான் உரிமை என்று நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிச் சத்தியவாக்கு என்ற பெயரில் பொய்சத்தியம் செய்து கொடுக்கும் இவர்களின் யோக்கியதையை. தங்களுக்குச் சொந்தக் கோவிலாளால் தினமும் சாவியைக் கொண்டு போய் ஒப்படைத்தது ஏன்? திரும்பவும் போய்த் தினமும் வாங்கி வந்தது ஏன்?

சாவியை எங்கே கொண்டு போய், எவரிடம் கொண்டு போய் ஒப்படைத்திருக்கிறார்கள்? அக்கம்பக்கத்திலே உள்ள அரசு அலுவலகத்தில் எதுவும் ஒப்படைக்க வில்லை. அவர்களில் மூத்த தீட்சிதரிடம் ஒப்படைக்கவில்லை. சிதம்பரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிச்சாவரத்தில் கொண்டு போய்ச் சேர்த்து அங்கிருந்து தினமும் காலை கொணர்ந்திருக்கிறார்கள். இச்செய்தி மறுக்கப்படாமல் நடைபெற்ற செய்தி.

ஆகத் தீட்சிதர்கள் கோயிலைக் காவல் காக்க இரவில் தங்குவது, காவல் காப்பது ஆகியனஎல்லாம் கடந்த நூற்றாண்டின் இடையில் ஏற்பட்ட பழக்கம் என்பது தெரிகிறது.

சிதம்பரம் கோயில் ஆட்சி உரிமையைப் பிச்சாவரம் ஜமீன்தார்கள் பெற்றிருந்ததில்லை மூவாயிரவர்க்குள் ஏற்படும் சிக்கல்களையும், வழக்குகளையும் பிச்சாவரம் ஜமீன்தாரே தீர்த்துவைத்தனர்.

நன்கு கவனிக்கவேண்டும். தீட்சதர்கள் தங்கள் வழக்குகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளாது பிச்சாவரம் ஜமீன்தாரின் தீர்ப்புக்கு விட்டனர் அதாவது பொது தீட்சிதர்கள் என்றும் தீட்சிதர்கள் சபை என்றும் அவர்கள் கொண்டிருக்கிற அமைப்பு சமீப காலங்களில் உருவாகி இருக்கிறது. இந்தப் பொது சபை கூடுவது. பொது சபை வழங்கும் தீர்ப்பு நடாராசர் வழங்கும் தீர்ப்பு என்பதெல்லாம் சமீபகாலங்களில் ஏற்பட்டுள்ளது.

பிச்சாவரம் ஜமீன்தார்கள் சோழர் வாரிசு என்பதால், கோவிலைக் கட்டியவர்கள் சோழ மன்னர்கள் என்பதால், அவர்களுக்கு அடங்கிக் கோயிலில் பூஜை செய்து வந்தவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் 5.11.1911இல் 12 தீட்சிதர்கள், தீட்சிதர்களின் சார்பில் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிச்சாவரம் ஜமீன்தாரை 1 மகாளளஸ்ரீ சக்கரவர்த்தியவர்கள் என்று குறிப்பிட்டுள்ளன.

முடிசூட்டு விழா என்பது ஆரிய முறைப்படி நடக்கத் தலைப்பட்ட பின்னர், முடிசூட்டுதலை தீட்சதர்கள் செய்து வந்துள்ளனர்.

வலம்புரிச் சங்கால் பஞ்சாக்கரப் படியில் அமரச் செய்து முடி சூட்டினர் என்பதைப்பின் வரும் பாட்டு உறுதிப்படுத்துகிறது.

அலகில் மற்றெவரும் அணுகுவதற்கு அரிய பற்சக்கரத்திருப்படி மிசை அமர்த்தி
அஞ்சேல் என நடம் ஆடும் இறைவன்முன் வலம்புரிச்சங்கால் கங்கை நீர் பெய்து நலம் பெறத் திருஅபிடேகம் செய்தபின் தேவரும் முனிவரும் திருவுளங்களிய
பூமகள் இங்கு பொன் மணி மண்டபத்து அரியாசனத்தில் அரசனை அமர்த்தி
பரிவுடன் துதித்துப் பரமனை வணங்கி முடிதலை முனிவர் திருக்கரத்து ஏந்திச் சூடினர் வாழ்த்திச் சோழனார் தமக்கே
கோயில் தீட்சிதர்களுக்கு உரிமை யுடையது என்றால் அவர்களுடைய கோயிலில் போய் சோழ மரபினர் என்று கூறப்படுவோர் முடி சூட்டிக் கொள் வார்களா?

பிச்சாவரம் ஜமீன்தார்கள் பட்டா பிஷேகத்தை ஒட்டிப் பட்டாபிஷேகப் பிரகடனம் என்ற பெயரில் வெளியிடும் அறிவிப்பிலே,

ஆதியிலே கௌட தேசாதி பனுடைய மூத்த குமாரனாகிய இரணிய வர்வச் சக்கரவர்த்தி என்னும் காரணப் பெயர் பூண்ட சிம்மவர்மச் சோழனால் பதஞ்சலி, வியாக்கிரபாதர்கள் ஆக்ஞைப் படி தில்லைக் காட்டைத் திருத்தி தேவாலயமாகப் பிரதிஷ்டை செய்யப் பெற்று ஸ்ரீ சிதம்பரம் நடராசப் பெரு மாள் சந்நிதியிலே தில்லை மூவாயிர முனிவர்கள் திருமுன்னே ஸ்ரீபஞ்சாக்கரப் படியின் மீதே மேற்படி சோழ வம்சத்தினருக்குத் தொன்று தொட்டு பட்டாபிஷேகம் நடந்து வந்த சம்பிராதாயப்படி அச்சோழ வம்சவழி வந்த பிச்சாவரம் ஜமீன்தார்.

எனும் அந்தப் பா தொடங்குகிறது முடிவுரையாகப் புலவர் இராசு இவ்வாறு முடிக்கையிலும் சோழருக்கு அன்றி முடி சூடாத்தில்லை மூவாயி ரவர் பிச்சாவரம் ஜமீன்தாருக்கு முடிசூட்டுவதாலும், அப்போது புலிக் கொடி அளித்தலினாலும், வளவன் என்ற பெயர் உள்ளமையாலும், தில்லை நிருவாகம் பெற்றிருந்த காரணத் தாலும் தில்லை நடராசரைக் குல தெய்வமாகக் கொண்ட காரணத் தாலும், தில்லைக் கோயில் சாவியை வைத்திருந்த உரிமையாலும், தில்லை தீட்சிதர்கள் கட்டுப்பட்டிருந்தமை யாலும், சோழனார் என்ற பெயர் பெற்றிருப்பதாலும் பிச்சாவரம் ஜமீன்தார் மரபினரே சோழர் மரபினர் என்பது பெறப் படுகிறது.

விடுதலைக்குப்பின் காங்கிரசு அரசு மய்யத்திலே பதவி ஏற்றபின் ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இவ்வாறு ஜமீன் ஒழிப்புச் சட்டமாக நிறை வேறியதும் ஜமீன்தார்கள் தாங்கள் கொண்டிருந்த அரண்மனை, கோயில், நிலம் ஆகியவற்றில் உரிமைகளை இழந்தனர்.

எனவே ஜமீன் ஒழிப்பிற்குப்பின் அதுவரை பிச்சாவரம் ஜமீன்தாரிடத்தில் இருந்த கோயில் உரிமையைப் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்கள் உரிமை கொண்டாடுபவர்கள் உரிமை யாளர்களாக மாறியதுபோல் தீட்சிதர்கள் உரிமை கொண்டாடத் தலைப்பட்டுவிட்டனர்.

அதுவரையில் ஜமீன்தாரிடம் சென்று கோயில் சாவியை ஒப்படைத்து பின் பெற்று வந்தவர்கள் சாவியைக் கொண்டு சென்று கொடுக்காமல் தாங்களே வைத்துக்கொண்டு நிருவாகம் செய்யத் தலைப்பட்டு விட்டனர். இதுதான் உரிமை. எனவே, உரிமை இல்லாததை உரிமை கொண்டாடி வருவது எப்படி சொந்தமாகும்?

நாட்டுடைமை என்பது பல துறைகளிலும் நிறைவேறியதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்ததன் விளைவாகக் கலைஞர் அந்த பேருந்துகளைத் தேசியமயம் எனப்படும் நாட்டுடைமையாக்கியது அதற்கு என்ன அரசியல் நோக்கமா இருந்தது? மக்கள் நலன்தான் முன்னின்றது. அது போலத்தான் நிருவாக அலுவலரை நியமித்துக் கோயில் நிருவாகம் நேர்மையாக வெளிப்படையாக நடைபெறச் செய்வதில் என்ன அரசியல் நோக்கமிருக்கமுடியும்?

தமிழகத்திலுள்ள மற்றைய கோவில் நிருவாகம் அப்படித்தானே நடை பெறுகிறது? இத்தகு நடவடிக்கைக்கு அர்த்தம் பொருள், உள்நோக்கம் கற்பிக்கலாமா? அர்ச்சகர்களான தில்லைத் தீட்சிதர்களுக்கும் தமிழக அரசுக்கும் இதுவரை பகையோ, மோதலோ ஏற்பட்டதும் கிடையாது. இதுபோல் மய்யஅரசு வங்கிகளை நாட்டுடமையாக்கியது, ஜமீன்தாரி முறையை ஒழித்தது. மன்னர் மானியம் ஒழிப்பைச் செய்தது இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஒரு பொது நோக்கத்தின்பால் ஏற்பட்டவை. இதனால் சமூகம் பயன்பெற்றிருக்கிறது. ஜமீன் ஒழிப்பினால் ஏழை எளிய மக்கள் வயலில் உழுது உழைத்தவர்கள் நில உடைமையாளர் ஆயினர்.

எனவே மக்கள் நலனுக்குச் சட்டங்கள், விதிமுறைகள் உருவாகின்ற போது அதற்குக் குறுக்கே நிற்காது துணை நிற்பது, காலமாறுதலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் நல்ல புத்திசாலித்தனமான அணுகுமுறை. அதனால் ஏற்படும் இழப்புகள் இருந்தால் இழப்பீடுகள் கேட்கலாம். வருமானக் குறைவு ஏற்படுமானால் ஈடுசெய்ய நிதி உதவி வேண்டலாம். தவறில்லை.


பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன்